snap

Monday, June 05, 2006

போதை மருந்து வழக்கில் ராகுல் மகாஜன் கைதாகிறார்?

மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரமோத்மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் போதை மருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். தற்போது ஆஸ் பத்திரியில் இருக்கும் அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.

அவருக்கு நினைவு திரும்பி விட்டாலும் இன்னும் முழுமையாக பேசும் அளவுக்கு இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ராகுல்மகாஜன் மயங்கி விழுந்ததற்கு போதை மருந்துதான் காரணம் என்று இப்போது உறுதியாக தெரிய வந்து உள்ளது. அவருடைய சிறுநீர் தனியார் ஆய்வுக் கூடம் ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரில் போதை மருந்து இருப்பது தெரிய வந்தது.

போதை மருத்து பயன் படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடர போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட எப்.ஐ.ஆரில் போதை மருந்து தொடர்பான 3 பிரிவுகளை சேர்த்துள்ளனர். ஆனாலும் ராகுல் மகாஜன் பெயரை அதில் நேரடியாக சேர்க்கப் படவில்லை. அவருடன் விருந்து சாப்பிட்ட 4 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைதான ஷகில் ராகுல் மகாஜனுக்கு போதை மருந்து கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் மகாஜனிடம் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டதால் இன்னும் விசாரணை நடத்த வில்லை.

இன்று அல்லது நாளை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் வாக்கு மூலத்தை பெற்ற பின் அவரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர் மீது போதை மருந்து வழக்கில் ஏதாவது ஒரு பிரிவு சேர்க்கப்படும்.

போதை மருந்து வழக்கில் பிரிவு 21, பிரிவு 27, பிரிவு 29 ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் பிரிவு 21 போதை மருந்து வியாபாரம் தொடர்பானது. இந்த பிரி வில் கைதானால் ஜாமீன் கிடையாது. 10 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

பிரிவு 27 போதை மருந்தை பயன்படுத்துவது தொடர்பானது. இது சாதாரண பிரிவுதான் இதன்படி கைதானால் ஒரு வருடம் வரை ஜெயிலோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

29-வது பிரிவு போதை மருந்து சதி தொடர்பானது விசாரணையின் அடிப்படையில் இதற்கு தண்டனை வழங்கப்படும்.

ராகுல்மகாஜன் மீது குறைந்த பட்ச தண்டனை பிரிவான 21-வது பிரிவை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு போதை மருந்து கொடுத்த ஷகீல் மீது அதிக பட்ச பிரிவு சேர்க்கப்படும். டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த அவரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-நன்றி: மாலைமலர்

Friday, June 02, 2006

கண்ணகி சிலை நாளை திறப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அகற்றப்பட்டது.

லாரி ஒன்று மோதியதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடைïறாக இருப்பதாக கூறி அதிகாரிகள் அந்த சிலையை அகற்றினார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கடற்கரையில் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தி.மு.க. ஆட்சியை பிடித்ததும் கண்ணகி சிலை வைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின.

முதல்- அமைச்சர் கருணாநிதி, பதவி ஏற்ற மறுநாளே மெரீனா கடற்கரைக்கு சென்று கண்ணகி சிலை இருந்த இடத்தைப் பார்வையிட்டு அந்த இடத்தில் பீடம் அமைப்பதற்கான ஆலோசனை தெரிவித்து உத்தரவிட்டார். பிறகு மே 15-ந்தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருஙகாட்சியகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை பார்வையிட்டார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவின்பேரில் கண்ணகி சிலை சீரமைப்பு பணி மும்முரமாக நடந்தது. இதற்கிடையே மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கான பீடம் அமைக்கும் பணியும் நடந்தது. அவை முடிந்ததும் கண்ணகி சிலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
பீடத்தின் மீது கண்ணகி சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து பீடத்தை கிரானைட் கல் மற்றும் கல்வெட்டு பதிக்கும் பணி நடந்தது. அந்த பணிகளும் இன்று நிறைவடைந்தன.

முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவுரையின் பேரில் கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் பழைய மாதிரி நிறுவப்பட்டு விட்டது. கண்ணகி சிலை திறப்புவிழா நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதி கண்ணகி சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் அமைச்சர்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.